ராகுலின் 2வது கட்ட யாத்திரை தொடக்க நிகழ்ச்சி: அனுமதி வழங்காத பாஜக அரசு.. இதுதான் காரணமா?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் 2வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் இம்பாலின் அரண்மனை மைதானத்தில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்

மூத்த காங்கிரஸ் தலைவரும் கேரள வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் நடைபயணத்தை முதல்கட்டமாக தமிழகத்தில் தொடங்கி ஜம்மு - காஷ்மீரில் நிறைவு செய்தார். இந்தப் பயணம் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில், தமது 2வதுகட்ட யாத்திரையைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் ராகுல். 2ஆம்கட்ட யாத்திரையை ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடங்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' என்ற பெயரில் ராகுல் காந்தி இப்பயணத்தை பேருந்து மற்றும் நடைபயணம் மூலம் மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கிவைப்பார் என சொல்லப்பட்டது. இந்த யாத்திரை, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிறைவடைகிறது.

ராகுல் காந்தியின் இந்த பேருந்து யாத்திரையானது 14 மாநிலங்களின் 110 மாவட்டங்கள் வழியாக 66 நாட்களில் 6,700 கிலோமீட்டருக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 100 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கும். இந்த யாத்திரை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி, மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ராகுலின் இந்த யாத்திரையின் தொடக்க விழாவுக்கு மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, அனுமதி மறுத்துவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது. இம்பாலின் அரண்மனை மைதானத்தில் இந்த தொடக்க நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக செய்து வந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PTI

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே நிலவும் மோதல், இன்னும் அங்கு முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில்கூட அம்மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஆகையால், இதனை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் யாத்திரை தொடக்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
“பிரதமர் மோடியின் ஆன்மா அதானி வசம் இருக்கிறது” - ராகுல் காந்தி விமர்சனம்

இதற்கு காங்கிரஸ் தரப்பு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ''வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கிருந்து பாரத் ஜோடோ நியாய யாத்ரா தொடங்கப்பட உள்ளது. இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய காங்கிரசின் விண்ணப்பம் ஒப்புதல் கேட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் மத்திய அரசின் வேலையா” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் “அதேநேரத்தில் மணிப்பூர் அரசு யாத்திரையைத் தொடங்க அனுமதி மறுத்தாலும், கோங்ஜோம் போர் நினைவுச் சின்ன வளாகத்திற்கு அருகிலுள்ள மற்றொரு இடத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம்” என மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இதுகுறித்து நாங்கள் ஏஐசிசி குழுவுடன் ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பைரன் சிங் கூறுகையில், “ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை செய்துவருகிறோம். இதுதொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்ற பின் உறுதியான முடிவை எடுப்போம்'' எனத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com