
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் வன்முறை நீடித்து வரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குக்கி இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மெய்தி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்துள்ளது. 7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டுபாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார்.
மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூர் கலவரம் உயிர்ப்புடன் இருப்பதற்கும் அதன் தாக்கமும் உயிர்ப்பலிகளும் அதிகளவில் இருப்பதற்கும் மிக முக்கிய காரணம், வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்களை கொள்ளை அடிப்பது தான் என்றும் கலவரத்தின் போது ஆயுதங்களை உபயோகிப்பது தான் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை மணிப்பூரில் நடந்துவரும் இனமோதலில் ஏறத்தாழ 180க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் சட்டசபையின் ஒருநாள் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 29) காலை 11 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தொடரை 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, குக்கி இனத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் சட்டசபையைப் புறக்கணித்தனர்.