சயீஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம்: “என் வாழ்க்கையே போய்விட்டது” - கைதாகி விடுதலையானவர் கண்ணீர்!
பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி தன் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கத்திக்குத்து சம்பவத்துக்குப் பின் மீட்கப்பட்ட சயீஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவரும் அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலமும் பெற்றுள்ளனர்.
இவ்விவகாரத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், கடந்த சில மாதங்களாக மும்பையில் வசித்து வந்துள்ளார் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது ஷரீபுல் என்ற அவர், கடந்த 19ம் தேதி கைதானார்.
இந்நிலையில் இவ்வழக்கில் மும்பை காவல்துறையினரால் தவறாக அடையாளம் காணப்பட்டு ஜனவரி 18ம் தேதி கைதாகி பின் அடுத்தடுத்த நாட்களில் விடுதலையான ஆகாஷ் (31) என்பவர், “மும்பை காவல்துறையினரால் என் வாழ்க்கையே பறிபோய்விட்டது” என்று நேற்றைய தினம் பரபரப்பு பேட்டியொன்றை அளித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடந்தது என்ன?
சயீஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் இவர்தான் என்று, கடந்த 17ம் தேதி சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது. அதிலிருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவந்தனர். அதில் 18ம் தேதியன்று, சத்தீஸ்கரிலுள்ள தர்க் என்ற ரயில்வே நிலையத்தில் ஆகாஷ் என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் சந்தேக அடிப்படையில் கைது செய்தனர். தொடர்ந்து 19ம் தேதி, வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுலை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, ‘தவறாக அடையாளம் காணப்பட்டுவிட்டார்’ எனக்கூறப்பட்டு ஆகாஷ் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் காவல்துறையின் ‘தவறான’ கைது நடவடிக்கையால் ஆகாஷ் தற்போது தன் வேலையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆகாஷ் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய புகைப்படத்தை ஊடகங்கள் காண்பித்ததால், என் குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் கண்ணீரிலும் உள்ளனர். மும்பை காவல்துறையினரின் ஒரு தவறு, என் வாழ்வையே அழித்துவிட்டது. சம்பந்தப்பட்ட சிசிடிவி-யில் வந்தவருக்கு மீசை இல்ல. எனக்கு மீசை உள்ளது. இதைக்கூட காவல்துறை கவனிக்கவில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அன்றைய தினம் நான் எனக்கு பெண் பார்க்க சென்றுகொண்டிருந்தேன். அதற்குள் கைது செய்துவிட்டனர். இதனால் பெண் வீட்டார் என்னை நிராகரித்துவிட்டனர். இன்னொருபக்கம், நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ‘இனி நீ பணிக்கு வராதே’ என்று கூறிவிட்டனர். என் தரப்பு நியாயத்தை கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை.
என் மீது கடந்த காலங்களில் கஃபே பரேடிலும், குர்கானிலும் இரு வழக்குகள் உள்ளன. ஆனால் அதற்காகமட்டுமே, சந்தேக அடிப்படையில் என்னை மோசமாக காவல்துறை அழைத்துச்செல்லலாம் நடத்தலாம் என்றில்லை. சம்பவ நாளன்று, என் வேலை விஷயமாகவே சயீஃப் அலிகானின் வீடு இருந்த பகுதி அருகே நான் சென்றேன். ஆனால் அன்று நடந்த சம்பவத்தால் நான் என் வாழ்க்கையையே இழந்துவிட்டேன்” என்றுள்ளார்.
மற்றொருபக்கம், கைதான ஷரிபுல்லின் கைரேகையானது வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில், எந்த கைரேகையுடனும் பொருந்தவில்லை என உயர்மட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஷரிபுல்லும் உண்மை குற்றவாளி இல்லையோ என்ற ஐயம் எழுந்துள்ளது.