புனே | ரயிலுக்கு அடியில் அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்.. விசாரணையில் முக்கிய தகவல்.. #Video
மக்களின் பயணத் திட்டங்களுக்குப் போக்குவரத்து முதன்மையானதாக இருக்கிறது. பேருந்து, ரயில், விமானம், கப்பல் எனப் பல வசதிகளில் போக்குவரத்துத் துறைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், நபர் ஒருவர் ரயிலுக்கு அடியில் அமர்ந்தபடி 250 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனே-டானாபூர் எக்ஸ்பிரஸின் (ரயில் எண் 12149) ஏசி-4 கோச்சின்கீழ் ரயிலின் ரோலிங் ஸ்டாக் மற்றும் கீழ்ப்பெட்டியில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ அசைவதைக் கண்டு வண்டி மற்றும் வேகன் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து ரயிலை நிறுத்துமாறு லோகோ பைலட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, ரயிலின் ரோலிங் ஸ்டாக் மற்றும் கீழ்ப்பெட்டியை ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்தப் பெட்டியின் அடியில் ஒரு நபர் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். பின்னர், அவரைப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படையிடம் (ஆர்பிஎஃப்) ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இடார்சியில் இருந்து 250 கிமீ தூரம், அதாவது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வழியில் பயணித்திருப்பது தெரியவந்தது. அந்த நபர் தன்னால் ரயில் டிக்கெட் வாங்க முடியவில்லை என்றும், அதனால் ஜபல்பூரை அடைய இந்த பயண முறையை கையாண்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்பதை அவரது பதில்கள் சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.