டெல்லி | கெஜ்ரிவால் மீது வீசப்பட்ட திரவம்! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்! பாஜக சொல்வதென்ன?
அரவிந்த் கெஜ்ரிவால் மீது மைவீச்சு
மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். விரைவில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து டெல்லி முழுவதும் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், இன்று (நவ.30) தனது ஆதரவாளர்களுடன் கெஜ்ரிவால் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஒருவர் திரவத்தை ஊற்றினார். உடனே, அந்த நபரைப் பிடித்த கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அவரைத் தாக்கினர். பின்னர் காவல் துறையில் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அசோக் ஜா என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், "டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசும் உள்துறை அமைச்சரும் எதுவும் செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
”இது கெஜ்ரிவாலின் பழைய உத்தி” -பாஜக குற்றச்சாட்டு
இதற்கு டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், ”அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு கெஜ்ரிவால் தனது பழைய தந்திரத்தைச் செய்ய ஆரம்பித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வோர் அரசியல் வியூகமும் தோற்றுப் போய்விட்டது. இப்போது அவர் மீண்டும் பழைய உத்திக்குத் திரும்பியுள்ளார். போனமுறையும் மை வீசப்பட்டது. இந்தமுறையும் அப்படித்தான் நடந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று என்ன புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளார் என்பதை அவரே சொல்ல வேண்டும். சந்தேக நபரை விசாரித்து உண்மையை கண்டறியுமாறு டெல்லி காவல் துறையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அரசியல் பிரசாரங்களில் பாஜக ஒருபோதும் அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறையின் பாதையை எடுத்ததில்லை" ” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நடந்தது என்ன?
கடந்த 2016ஆம் ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்றபோது, மாணவர் ஒருவர் அவர் மீது மை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேச விரோதி" என்று சத்தமிட்டபடி அவர் முகத்தில் மை வீசினார். பின்னர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பைச் சேர்ந்த தினேஷ் ஓஜா என தெரிய வந்தது. இதற்கு அப்போது பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை நான் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.