’ஃபிளைட்டை பக்கத்துல பார்க்கணும்’: ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபர்!
மும்பையில் விமான நிலையத்துக்குள் புகுந்து, விமானத்தை நோக்கிய ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந் தது. அப்போது விமான நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசை பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் விமான நிலையத் துக்குள் புகுந்து வந்தார். தலையில் கர்சிப்பை கட்டியிருந்தார்.
பின்னர். அவர் ஓடுபாதையில் நின்ற விமானத்தை நோக்கிச் சென்றார். விமானத்தின் முன்பக்கமாக போய் நின்று அங்கும் இங்கும் பார்த்தார். பிறகு விமானத்தின் டயரை தொட்டபடி போஸ் கொடுத்தார்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் உடனடியாக ஓடி சென்று அவரைப் பிடித்தனர். ’விமானத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் வந்தேன்’ என்றார் வாலிபர். அவரை பிடித்த போலீசார் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.
அந்த வாலிபர் மனநிலை சரியில்லாதவர் என்றும் அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் கூறினர். அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் கொடுத்ததை அடுத்து, விமான நிலைய போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.