சுங்கச்சாவடி பெண் ஊழியரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நபர்; பதிலுக்கு செருப்படி கொடுத்த பெண்

சுங்கச்சாவடி பெண் ஊழியரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நபர்; பதிலுக்கு செருப்படி கொடுத்த பெண்
சுங்கச்சாவடி பெண் ஊழியரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நபர்; பதிலுக்கு செருப்படி கொடுத்த பெண்

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் செல்ல அனுமதி மறுத்த சுங்கச்சாவடி பெண் ஊழியரை ஆண் ஒருவர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கார் - போபால் சாலையில் கச்னாரியா பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தன்னை உள்ளூர்வாசி என அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜ்குமார் குர்ஜார் என்ற நபர் தனது காரில் சென்றபோது FASTag - மின்னணு கட்டணம் செலுத்தும் முறையில் வரி செலுத்த முடியாது என்று கூறி அங்குள்ள பெண் ஊழியரிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் தனக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கான ஆவணத்தை காட்டச்சொல்லி அந்த பெண் ஊழியர் கேட்டபோது அவர் அதை காட்டாமல் தொடர்ந்து சண்டையிட்டதுடன் அந்த ஊழியரின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார். பதிலுக்கு அந்தப் பெண் தனது செருப்பால் அந்த நபரை அடித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அனுராதா டாங்கி கூறுகையில், ‘’அவர் உள்ளூர்வாசி என்று கூறினார். ஆனால் எனக்கு உங்களை தெரியாது என்று கூறினேன். பிறகு நான் எனது மேற்பார்வையாளரிடம் சென்று இதுகுறித்து கூறினேன். மேற்பார்வையாளர் அந்த நபர் எனக்கு தெரிந்தவரா என்று கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். அப்போது அந்த நபர் தனது வாகனத்துடன் அங்கிருந்து நகரும்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துவிட்டார். நானும் பதிலுக்கு அடித்தேன்’’ என்று கூறியுள்ளார். மேலும் அந்த சுங்கச்சாவடியில் 7 பெண்கள் பணிபுரிவதாகவும், அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல்நிலைய அதிகாரி ராம்குமார் ரகுவான்ஷி கூறுகையில், ‘’சுங்கச்சாவடியில் பணிபுரிவோர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அனுராதா டாங்கி என்ற பெண் எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றையும் அந்த நபருக்கு(ராஜ்குமார் குர்ஜார்) எதிராக கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் இந்திய சட்டப்பிரிவுகளான 354, 323 மற்றும் 506இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி இன்னும் கைதுசெய்யப்படவில்லை’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com