பெங்களூரு|சாலையில் ஏற்பட்ட பள்ளம்... மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய நபர்!
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இந்தவகையில், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட சேதத்தால் தனக்கு ஏற்பட்ட மன மற்றும் உடல்ரீதியான அதிர்ச்சியை காரணம் காட்டி பெங்களூரு மாநகராட்சியிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார் 43 வயதான நபர் ஒருவர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
ரிச்மண்ட் டவுனில் வசிக்கும் திவ்யா கிரண் என்றவர்தான் இந்த நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்.
அதில், "நான் வரி செலுத்தும் ஒரு குடிமகன். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பை பராமரிக்க தவறியுள்ளது. பெங்களூரு நகரின் இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும்போது உடல் ரீதியான துன்பங்களையும் மன வேதனையையும் எதிர்கொண்டேன். இதனால் ஏற்பட்ட கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக, எலும்பியல் மருத்துவமனைக்கு ஐந்து முறை சென்றேன். எனக்கு 4 முறை அவசர சிகிச்சை அளித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துவரும் நெட்டிசன்கள், ‘ இவரு கேட்டதுல என்னப்பா தப்பு இருக்கு?..” என்றும் இப்பெண்ணுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.