“சிகிச்சைக்கு மறுத்ததால் என் குழந்தை இறந்தது”- எடியூரப்பா வீட்டு முன் தந்தை போராட்டம்!

“சிகிச்சைக்கு மறுத்ததால் என் குழந்தை இறந்தது”- எடியூரப்பா வீட்டு முன் தந்தை போராட்டம்!
“சிகிச்சைக்கு மறுத்ததால் என் குழந்தை இறந்தது”- எடியூரப்பா வீட்டு முன் தந்தை போராட்டம்!
தனது ஒரு மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்ததன் காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, முதலமைச்சர் எடியூரப்பா வீட்டுமுன் குழந்தையின் தந்தை  போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
பெங்களூரின் பசாவேஸ்வர நகரில் தனியார் நிறுவன ஊழியரான வெங்கடேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 13-ம் தேதி தனது ஒரு மாத வயதுடைய குழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
 
பதறிப்போன குழந்தையின் தந்தை தனது வீட்டுக்கு எதிரே கிளினிக் நடத்தும் மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்து காண்பித்துள்ளார். குழந்தையின் இருதயத்தில் பிரச்சினை இருப்பதுபோல் தெரிவதாக கூறிய மருத்துவர் உடனே மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 
மருத்துவரின் ஆலோசனையின்படி, சிகிச்சைக்காக குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். பவேவேஸ்வர நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அனுமதிக்க மறுத்திருக்கின்றனர்.
 
அதனைத் தொடர்ந்து சேஷாத்ரிபுரா, யேஷ்வந்த்பூர், சோர்ட் ரோடு, கோரகுண்டேபல்யா என சுமார் 200 கி.மீ தூரம் நகருக்குள் அலைந்து திரிந்து, கிட்டத்தட்ட 12 தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் எல்லாம் வீண். கொரோனா அச்சத்தால் எந்த மருத்துவமனையும் குழந்தையை அனுமதிக்க தயாரில்லை. இரவானதால் குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார் அவர்.
 
மறுநாள் திங்கள்கிழமை காலை மீண்டும் மருத்துவமனையை தேடி பயணிக்க ஆரம்பித்துள்ளார். ஜெயதேவா ஃப்ளைஓவர் அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுள்ளது. உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று காண்பித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் முன் தனது குழந்தையின் புகைப்படத்துடன் அமர்ந்து வெங்கடேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சிலரும் கலந்து கொண்டனர். உடனே போலீசார் வெங்கடேஷ் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
 
பின்னர் வெங்கடேஷிடம் நடந்ததை ஒரு கடிதமாக எழுதித் தருமாறும் அதை முதல்வரிடம் ஒப்படைப்பதாகவும் முதல்வரின் அலுவலக ஊழியர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com