’நான் என்ன கேட்டேன்? நீ என்ன அனுப்பியிருக்கே?’ செல்போன் கேட்டவருக்கு கிடைத்தது செங்கல்!
என்னதான் விழிப்பாக இருந்தாலும் மோசடி மன்னன்கள் தங்கள் வேலையை கச்சிதமாக காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் ஆன்லைன் மோசடிகள், கேஷூவலாக நடக்கிறது. சமீபத்தில், ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவர், பார்சலில் வந்த செங்கலைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஹட்கோ பகுதியைச் சேர்ந்தவர், கஜனன் காரத். இவர், கடந்த 9 ஆம் தேதி ஆன்லைன் மூலம் புதிய செல்போன் ஆர்டர் செய்தார். அதற்காக ரூ.9,134 பணம் செலுத்தினார். ’பணம் கிடைத்துவிட்டது. ஒரு வாரத்துக்குள் போன் வந்துவிடும்’ என அவருக்கு மெசேஜ் வந்தது.
புது செல்போன் வரும் மகிழ்ச்சியில் இருந்தார். நினைத்த மாதிரி அவருக்கு பார்சல் வந்துள்ளது. ஆசையோடு அதைத் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. செல்போனுக்கு பதில் செங்கல்துண்டு இருந்தது. கடுப்பான காரத், ஆவேசமாக ‘நான் என்ன கேட்டேன், நீ என்ன அனுப்பியிருக்கே?’ என்று சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்துக்கு போன் செய்து கேட்டார். அவர்கள் கூலாக, ‘ஸாரி, சார். பார்சலை கொடுக்கிறதுதான் எங்க வேலை. அதுக்குள்ள என்ன இருக்குங்கறதுக்கு நாங்க பொறுப்பில்ல’ என்றனர்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த காரத், ஹர்சூல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.