மாகாராஷ்டிரா|எதிர்ப்பை மீறி திருமணம்.. ஆத்திரத்தில் தாய்மாமன் செய்த சம்பவம்!
பெற்றோரின் எதிர்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்பவர்களை ஊரை விட்டு விலக்கி வைப்பதும், மணமக்களை பழிவாங்குவதுமான போக்கு காலம் காலமாக நடைபெற்றுவருகிறது. ஆணவக்கொலையில் தொடங்கி எத்தனையோ குற்றங்கள் இதுதொடர்பாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன.இவற்றை மிஞ்சும் வகையில் மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பன்ஹாலா தாலுக்காவிற்குட்பட்ட உட்ரே கிராமத்தில்தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்ரே கிராமத்தில் வசித்து வருபவர் மகேஷ் பாட்டீல். இவரது சகோதரியின் மகள் மகேஷின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இறுதியில் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், தாய்மாமனான மகேஷுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை.
இதனால், ஆத்திரமடைந்த மகேஷ் , பழிதீர்த்துக்கொள்ளும் விதமாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இவர் விஷம் கலப்பதை மண்டபத்தில் கண்ட சிலர் இதுக்குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறைக்கு தகவலளிக்க.. மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.