இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மாடலிடம் மிரட்டல்!
பிரபல மாடலின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மும்பையை சேர்ந்தவர் அரிஷா ஜெயின். பிரபல மாடலான இவர், அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு ஒரு மெயில் வந்தது. ’இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் அழிக்கப்பட்டு விடும். அதை தடுக்க வேண்டும் என்றால் கீழே லிங்கை கிளிக் செய்யவும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கிளிக் செய்தார் அரிஷா. ஒன்றும் ஆகவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் கிளிக் செய்து பார்த்தால், இன்ஸ்டாகிராம் பக்கம் பிளாக் செய்யப்பட்டிருந்தது. அவரது பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைத்தளக் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
பின் அவரது வாட்ஸ் அப்-புக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் உங்கள் கணக்கு மீண்டும் வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பிளாக் மெயிலை அடுத்து, மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார் அரிஷா. போலீசார், பணம் தருவதாக அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்படி கூறினர். அப்படியே செய்தார் அவரும்.
பிறகு பிளாக்மெயில் செய்தவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை பிடிக்கத் திட்டமிட்டனர். அதே போல அவர் விசாகப்பட்டினத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அவர் பெயர், சந்திரபிரகாஷ் ஜோஷி என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், இதே போல வேறு யாரிடமும் பிளாக்மெயில் செய்து பணம் பெற்றிருக்கிறாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.