ரூ.34 லட்சம் கொடுத்து ‘007’ என்ற கார் நம்பர் வாங்கிய ஜேம்ஸ் பாண்டு ஃபேன்
சமீபத்தில் அகமதாபாத்தின் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆஷிக் என்ற நபர், 007 என்ற நம்பரை ஏலத்தில் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார் .
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஆஷிக் படேல்(28). இவர் சமீபத்தில் அகமதாபாத்தின் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 007 என்ற நம்பரை ஏலத்தில் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை என்றுதானே நினைக்கிறீர்கள்? கிட்டத்தட்ட ஒரு காரின் விலையைக் கொடுத்து ஜேம்ஸ் பாண்டை குறிக்கும் ஃபேன்ஸி நம்பரான 007 என்ற நம்பரை மட்டும் வாங்கியுள்ளார்.
கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிற நேரத்தில் காரின் விலைக்கு நிகராக ஒரு நம்பர் ப்ளேட் வாங்கியிருக்கிறார் என்பது டூ மச்சாகத்தான் தெரிகிறது. ஆனால் இதுபற்றி படேல், ’’இந்த நம்பர் வாங்குவது எனக்கு பணத்தைப் பொறுத்தது அல்ல; இது என்னுடைய லக்கி நம்பர்’’ என்கிறார்.
நவம்பர் 23ஆம் தேதி ஆஷிக், தனது டொயோடா ஃபார்ஷ்யூனர் காருக்கு GJ01WA007 என்ற எண்ணை பதிவுசெய்ய முன்வந்துள்ளார். இந்த ஃபேன்ஸி நம்பருக்கான ஏலம் ரூ.25 ஆயிரத்திலிருந்து தொடங்கியுள்ளது. மற்றொருவருக்கும் ஆஷிக்கிற்கும் இடையே சில மணிநேரங்கள் நடந்த கடும்போட்டியில் ஏலம் ரூ. 25 லட்சத்தை எட்டியுள்ளது. அடுத்து இரவு 11.53 மணியளவில், ஆஷிக் ஏலத்தின் கடைசித் தொகையான ரூ.34 லட்சத்திற்கு இந்த ஃபேன்ஸி எண்ணை பெற்று நள்ளிரவில் ஏலத்தை முடித்துள்ளார்.