“என் மகனிடம் சொல்லிடாதீங்க”.. போலி ஐடி கார்டுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய தொழிலதிபர்!

“என் மகனிடம் சொல்லிடாதீங்க”.. போலி ஐடி கார்டுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய தொழிலதிபர்!
“என் மகனிடம் சொல்லிடாதீங்க”.. போலி ஐடி கார்டுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய தொழிலதிபர்!

விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளிடம் கையும்களவுமாக சிக்கியதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தை தனது மகனிடம் தெரிவித்துவிட வேண்டாம் என சிந்தன் காந்தி கெஞ்சினார்.

மும்பை விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்பி வைக்க வருபவர்கள் சர்வதேச புறப்பாடு முனையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். அதற்குமேல் செல்ல சிறப்பு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், மும்பை விமான நிலையத்தின் சர்வதேச புறப்பாடு முனையத்துக்கு வந்த நபர் ஒருவர் தனது பெயர் ராம்குமார் எனவும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சி.ஐ.எஸ்.எஃப்.) உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும் கூறி அதன் அடையாள அட்டையைக் காண்பித்து போர்டிங் கேட் வரை செல்லவிருப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் காண்பித்த அடையாள அட்டையை பரிசோதித்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.

அதனைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எஃப். இன்ஸ்பெக்டர் அவினாஷ் ரஞ்சன் அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது பெயர் சிந்தன் காந்தி என்பதும் மும்பை விபி சாலை பகுதியில் வசித்துவரும் ஒரு தொழிலதிபர் என்பதும் தெரியவந்தது. வெளிநாட்டிற்கு படிப்புக்காக செல்லும் தனது மகனை போர்டிங் கேட் வரை சென்று வழியனுப்பி வைப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார். இணையதளத்தில் இருந்து சிஐஎஸ்எஃப் அடையாள அட்டையின் புகைப்படத்தை டவுன்லோட் செய்து அதில் தனது படத்தை மார்பிங் செய்து அடையாள அட்டையாக லேமினேட் செய்திருக்கிறார்.

சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளிடம் கையும்களவுமாக சிக்கியதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தை தனது மகனிடம் தெரிவித்துவிட வேண்டாம் என சிந்தன் காந்தி அதிகாரிகளிடம் கெஞ்சினார். அதற்கு சம்மதித்த சி.ஐ.எஸ்.எஃப். காவலர்கள், சிந்தன் காந்தியை அவரது மகனுக்கு தெரியப்படுத்தாமல் அழைத்துச் சென்று சஹார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சிந்தன் காந்தியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com