செல்போனின் பாஸ்வேர்டை தர மறுத்த காதலி: கொலை செய்த காதலன் !

செல்போனின் பாஸ்வேர்டை தர மறுத்த காதலி: கொலை செய்த காதலன் !

செல்போனின் பாஸ்வேர்டை தர மறுத்த காதலி: கொலை செய்த காதலன் !
Published on

செல்போனின் பாஸ்வேர்டை காதலி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

கிழக்கு டெல்லியின் விநோத் நகர் பகுதியில் வசித்து வருபவர் மம்தா சர்மா (35). இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரும் பிரம்பால் சிங் (39) என்பவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதில் பிரம்பால் சிங்குக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். மம்தா சர்மாவுக்கு 17 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

பிரம்பால் சிங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளார் மம்தா. இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போகவே திருமணம் செய்துக்கொள்ளாமல் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் மம்தாவின் மகனும் உடனிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மம்தா வீட்டில் சுத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனை அவரது மகன் வீட்டுக்கு வந்தபோது பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரம்பால் சிங்கை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் மம்தா சர்மாவை கொலை செய்ததை பிரம்பால் சிங் ஒப்புக்கொண்டார். விசாரணையில் மம்தா கடந்த சில நாள்களாகவே பிரம்பால் சிங்குடனான உறவை முறித்துக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. பிரம்பால் சிங்குக்கு மம்மதா வேறு ஆணுடன் செல்போனில் உரையாடுவதாக சந்தேகம் இருந்தது. சம்பவ தினத்தன்று மம்தாவின் செல்போன் பாஸ்வேர்டை கேட்டுள்ளார் பிரம்பால்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மம்தா பாஸ்வேர்டை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரம்பால் சிங் சுத்தியால் மம்தாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மம்தா உயிரிழந்தாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com