”வீட்டு சாப்பாடு சாப்பிட்டா என்னவாம்..” - airport-ல் அம்மாவுடன் ஆலு பராத்தா உண்ட இளைஞர்!

”வீட்டு சாப்பாடு சாப்பிட்டா என்னவாம்..” - airport-ல் அம்மாவுடன் ஆலு பராத்தா உண்ட இளைஞர்!
”வீட்டு சாப்பாடு சாப்பிட்டா என்னவாம்..” - airport-ல் அம்மாவுடன் ஆலு பராத்தா உண்ட இளைஞர்!

விமானத்தில் ஏறி வானில் பறக்கக் கூடிய எண்ணம் இன்றைய சூழலில் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினருக்கும் வாய்த்திருந்தாலும் அந்த விமானத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் விமான நிலையத்தில் விற்கப்படும் உணவுக்காக செலவிடும் விலைதான் விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கும்.

இருப்பினும் சிலர் வேறு வழியில்லாமல் கவுரவத்திற்காக பணம் செலவழித்து அத்தகைய உணவுகளை வாங்குவதும் நிகழும். அவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அந்த உணவில் ஆரோக்கியம் இருக்குமா என்றால் அதற்கு கேள்விக்குறிதான் பதிலாக அமையும்.

அதேவேளையில், விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டால் கொலை, கொள்ளையை செய்த குற்றவாளிகளை போன்ற பார்வையையே அனுபவிக்க நேரிடும். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது சாவகாசமாக தன் அம்மா கையால் சமைத்த பராத்தாக்களை ஏர்ப்போர்ட்டின் காத்திருப்பு அறையில் வைத்து சாப்பிட்டதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மதுர் சிங் என்ற பயனர்.

அவரது ட்விட்டர் பதிவில், “நடுத்தர குடும்பத்தினர் விமானத்தில் பயணிப்பது தற்போது சுலபமான செயலாக மாறிவிட்டது. இருப்பினும் சமூகத்தின் அழுத்தத்தால் 400 ரூபாய்க்கு ஒரு தோசையும், 100 ரூபாய்க்கு ஒரு வாட்டர் பாட்டிலும் வாங்குவது இப்போதும் மிகப்பெரிய கொடுமையாகத்தான் இருக்கிறது.

கோவா செல்வதற்காக ஏர்ப்போர்ட் வந்த போது காத்திருக்கும் நேரத்தில் என் அம்மா செய்த ஆலு பராத்தாவை எலுமிச்சை ஊறுகாயுடன் தொட்டு சாப்பிட்டோம். இதனைக் கண்ட சிலர் எங்களை ஏளனமாகவும், கேவலமாகவே பார்த்தார்கள். ஆனால் எங்களுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை.

உங்களுடைய பாக்கெட் அனுமதிக்கும் அளவுக்கு மட்டும் செலவழியுங்கள். நீங்கள் விருப்பப்பட்ட உணவை சுவையுங்கள். சமூக என்ன நினைக்கும் என யோசிக்காதீர்கள். உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கான ஸ்டைலில் வாழுங்கள்.” என மதுர் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரது இந்த ட்விட்டர் பதிவு நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் பெற்று, மதுரின் கருத்துக்கு ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள். அதில், “நீங்கள் சொல்வது சரிதான். மக்கள் பெரும்பாலும் சமூக கவுரவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனக்கு விமான நிலைய உணவே பிடிக்காது. எப்போதும் எனக்கான டின்னர் அல்லது லஞ்ச்சை கொண்டு செல்வேன். என் மனைவியும், தாயும் எனக்காக செய்துக்கொடுப்பது பெருமையாக இருக்கிறது.” என்று அபிநவ் என்பவர் பதிவிட்டிருக்கிறார்.

இப்படியாக பலரும் விமான நிலையத்தில் விற்கப்படும் உணவு குறித்தும், விமான பயணத்திற்காக வீட்டிலிருந்து கொண்டுச் செல்லப்படும் உணவு குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுபோக, “வீட்டு சாப்பாட்டை விமான நிலையத்தில் சாப்பிடும் போது சிலருக்கு பிரச்னையாக இருக்கலாம். பரவாயில்லை. இதை மேலும் செய்து அவர்கள் கடுப்பாக்குவதில் தவறில்லை” கிண்டலாகவும் கௌரவ் என்பவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com