அம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், நான் இல்ல: ஃபேஷன் டிசைனர் மகன் தகவல்!
மும்பையில் ஃபேஷன் டிசைனர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவர் மகன், ’அம்மாவை கொன்றது பில்லி சூனியம்தான், தான் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வந்தவர் பேஷன் டிசைனர் சுனிதா சிங் (45). இவர் மகன் லக்சயா சிங் மற்றும் அவரது வருங்கால மனைவி ஆஸ்பிரியா பானர்ஜி வசித்து வந்தனர். லக்சயா மாடலிங் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை சுனிதா சிங் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மகன் லக்சயா, அவர் குளியல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அவர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தள்ளிவிட்டதால்தான் சுனிதா சிங் உயிரிழந்ததாகத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஆஸ்பிரியா மற்றும் நண்பர் நிகில் ராஜ் ஆகியோருடன் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார் லக்சயா. சுனிதா சிங், தனது கணவர் இறந்த பிறகு மோசமான கனவுகளால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதையடுத்து சாமியார் ஒருவரை அவர் சந்தித்து வந்துள்ளார். அவரது ஐடியாபடி வீட்டில் அவர் எப்போதும் சத்தமாக மந்திரம் ஓதி வந்துள்ளார். இது அவர் மகன் லக்சயாவுக்கும் அவரது வருங்கால மனைவிக்கும் தொந்தரவாக இருந்துள்ளது. இரவில் தூங்க முடியவில்லை. இதுகுறித்து அம்மாவுக்கும் மகனுக்கு அடிக்கடி தகராறு. அன்றும் அம்மாவின் சத்தம் அதிகமாக இருந்ததால் சண்டை போட்டுள்ளார் லக்சயா. வாய்த்தகராறு முற்றி ஆத்திரத்தில் அவரை பாத்ரூமுக்குள் தள்ளியுள்ளார். இதில் அவர் தலையில் காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லக்சயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் வரும்போது, ’என் அம்மாவை நான் கொல்லவில்லை. மாந்தீரிகம்தான் கொன்றது’ என்று மீடியாவிடம் தெரிவித்தார் அவர்.
லக்சயா, போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். அதன் காரணமாக ஏற்பட்ட பிரமையால் அவர் அம்மாவுடன் தகராறில் ஈடுபட்டு கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை மேலும் நடந்து வருகிறது.