ஒரு ஆளுக்கு ரூ.3ஆயிரம்: லாரியில் 47 பேரை அழைத்துச் சென்று போலீசில் சிக்கிய ஓட்டுநர்!
(கோப்பு புகைப்படம்)
குஜராத்தில் இருந்து 47 தொழிலாளர்களை மத்திய பிரதேசத்திற்கு லாரி மூலம் அழைத்துச் செல்ல முயற்சி செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பல தொழிலாளர்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர், போக்குவரத்து இல்லாத காரணத்தால் பலர் தங்கள் ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.
மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பரவும் தொற்று நோய் என்பதால் ஊரடங்கு வரை யாரும் வெளியே வர வேண்டுமென்றும், பயணம் செய்ய வேண்டாமென்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் இருந்து 47 தொழிலாளர்களை மத்திய பிரதேசத்திற்கு லாரி மூலம் அழைத்துச் செல்ல முயற்சி செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள குஜராத் போலீசார், ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். நெடுஞ்சாலைகளிலும் தீவிரமாக சோதனை நடைபெறுகிறது.
நேற்று இரவு லாரியில் 47 பேரை அழைத்துச் சென்ற ஓட்டுநரை கைது செய்துள்ளோம். தலா ரூ.3ஆயிரம் வசூல் செய்து அந்த ஓட்டுநர் தொழிலாளர்களை அழைத்துச் சென்றுள்ளார். கொண்டல் தாலுக்கா அருகே லாரியை மடக்கிய போலீசார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.