கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் மருத்துவமனையின் 5 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 27 ஆயிரம் பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 872 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் 50 வயதான நபர் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று திடீரென அந்த நபர் விக்டோரியா மருத்துவமனையின் 5 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து பெங்களூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.