கொரோனோ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டவரை 15 நாட்களாக காணவில்லை - குடும்பத்தார் அதிர்ச்சி..!
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டவரை 15 நாட்களாக காணவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் நகரம், ஜின்ஸி சௌராய் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திர். இவருக்கு கடந்த மே 29 ஆம் தேதி இவருக்கு சளி, இருமல் மற்றும் மூச்சு திணறல் பிரச்னை இருந்துள்ளது. முதலில் தனியார் மருந்துவமனைக்கு சென்ற அவர், மே 31ம் தேதி காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை ஜூன் ஒன்றாம் தேதி முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஜூன் 3ம் தேதி மருத்துவமனைக்கு சென்று அவர்கள் பார்த்த போது அங்கு அவர் காணவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். நரேந்திரை காணவில்லை என்று அவரது குடும்பத்தார் ஜூன் 6ம் தேதி மங்கல்ஹட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து நரேந்திரின் சகோதரர் முகேஷ் சிங் கூறுகையில், “கடந்த மே 31ம் தேதி காலை அவரிடம் நான் பேசினேன். அவரை யாரும் வந்து சோதனை செய்யவில்லை என்றும் இரவு வரை உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் கூறினார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டது. எனது சகோதரருக்கு கொரோனா தொற்று இல்லை. குளிர்ந்த நீரில் குளித்ததால் அவருக்கு சளி பிடித்துவிட்டது” என்றார்.
இதுகுறித்து மங்கல்ஹட் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரனாவீர் ரெட்டி கூறுகையில், “மருத்துவமனை வளாகத்தில் எங்களது குழுவினர் மூன்று முறை சோதனை செய்துவிட்டனர், ஆனால் அவரை காணவில்லை. நரேந்தர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளை கூட சோதனை செய்து பார்த்துவிட்டோம், அதிலும் அவர் தென்படவேயில்லை” என்றார்.
உடல்நிலை சரியில்லாத நரேந்திரை முதலில் அவரது தாயார் நிர்மலா மே 30ம் தேதி ஓஸ்மானியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கொரோனா அறிகுறி இருப்பதால் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர். அங்கிருந்து கிங் கோட்டி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து மற்ற நோயாளிகள் சிலருடன் ஆம்புலன்ஸ்சில் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உறவினர்கள் யாரும் உடன் வரக்கூடாது என்று கூறி அவரது தாயையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

