மேற்கு வங்க பள்ளியில் மோடியின் ‘மன் கி பாத்’ உரை: மம்தா கோபம்!
மாதம்தோறும் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பிரதமரின் ‘மன் கி பாத்’ உரையை கட்டாயப்படுத்தி மாணவர்களை கேட்க வைக்கும் பள்ளிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஷிக்ஷயதன் தனியார் பள்ளி பொறுப்பாளர்களை அழைத்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் தலைவர்களின் உரைகளை பள்ளிகளில் ஒலிபரப்புவதும், மாணவர்களை பார்க்க வற்புறுத்துவதும் தவறு. அவை வெறும் அரசியல் சார்பானவை என்று கூறினார். இதை மறுத்த பள்ளி நிர்வாகத்தினரிடம், “எனக்கு எல்லாம் தெரியும். நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களே அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்” என்றார்.
மேலும், “என்னுடைய உரையை கூட பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதும் தவறுதான். இனிமேல் இப்படி நடக்கக் கூடாது” என்று எச்சரித்துள்ளார்.