தொடரும் “மம்தா தர்ணா” - கொல்கத்தாவில் குவியும் கட்சித் தொண்டர்கள்

தொடரும் “மம்தா தர்ணா” - கொல்கத்தாவில் குவியும் கட்சித் தொண்டர்கள்
தொடரும் “மம்தா தர்ணா” - கொல்கத்தாவில் குவியும் கட்சித் தொண்டர்கள்

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்றிரவு தொடங்கிய தர்ணா போராட்டம் தொடர்ந்து வருகிறது.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை, மேற்குவங்க காவல்துறையினர் ஆணையர் இல்லத்தின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட சிபிஐ அதிகாரிகள் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் பரப்புகளுக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். தாங்கள் நினைத்திருந்தால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் என்று கூறினார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்ற அவர், மேற்குவங்கத்தில் மத்திய அரசு அராஜகத்தை பரப்ப முயற்சிக்கிறது என்றார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மம்தாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காக்க வலியுறுத்தியும் முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை தொடங்கினார். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் காவல் ஆணையர் ராஜீவ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நேற்றிரவு தொடங்கிய இந்த தர்ணா தற்போதும் நீடித்து வருவதால், அங்கு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com