”இது செய் அல்லது செத்துமடி போராட்டம்” - தொடர் நெருக்கடிக்கு மத்தியில் மம்தா உரை!
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பொதுவாகவே மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றொரு கட்சியிடம் ஆட்சியை இழந்தால் அந்த கட்சியின் கட்டமைப்பே சிதைந்து விடும். அங்கு முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோரும் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னர் அவர்களின் கட்டமைப்பே சிதைந்தது. அந்த வகையில் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் அடித்தளமும் சிதையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மீது சுமார் 50 எம்.எல்.ஏ.க்களும், 20 எம்பிக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியின் மத்திய தலைமை அனுமதி அளித்தால் அவர்கள் பாஜகவுக்கு மாறத் தயாராக இருப்பதாக பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்திருந்தது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை கிளப்பியிருந்தது. தொடர்ந்து, சமீபத்தில் நடந்த திரிணமூல் காங்கிரஸின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்றதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிலும் பிற மாவட்டங்களிலும் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே மோதல்கள் வெடித்தன. இந்த மோதல்களில் தொண்டர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக பாஜக மற்றும் திரிணமூல் கட்சிகள் தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலருமான அபிஷேக் பானர்ஜி மே 30-ம் தேதி சோனார்பூர் பகுதிக்குச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் அவர்மீது கற்கள், காலணிகள் மற்றும் முட்டைகளை வீசி எறிந்ததோடு, “திருடன் திருடன்” என முழக்கமிட்டு அவரை தாக்கிய சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே அடங்குவதற்குள் அடுத்த நாளே ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சாண்டிதாலா காவல் நிலையத்திற்கு வெளியே மூத்த திரிணமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டு தலையில் காயம் அடைந்திருந்தார்.
இந்தசூழலில் தான், இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிஉட்பட அக்கட்சியின் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, சிலரால் கட்சியை பிளவுப்படுத்தும் சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது எனவும் மற்ற தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினாலும், தொண்டர்களை நாங்கள் கைவிடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

