கர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து!
கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிறகு பின்னுக்குத் தள்ளப்பட்டது. 11.30 மணி நேர நிலவரப்படி பாஜக 112 இடங்களிலும் காங்கிரஸ் 68 இடங்களிலும் மத சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் கர்நாடகாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ’வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வியடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள்.. மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகி இருக்கும். மிகவும் வித்தியாசமாகி இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.