வேட்பாளர் விவகாரம்: உறவை முறித்த மம்தா பானர்ஜி.. உடனே Sorry கேட்டு சரணடைந்த சகோதரர்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் சகோதரர் பாபன் பானர்ஜியின் உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே, அவரது சகோதரர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாபன் பானர்ஜி, மம்தா பானர்ஜி
பாபன் பானர்ஜி, மம்தா பானர்ஜிட்விட்டர்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் நாடு முழுவதும் வேகம் பிடித்து வரும் நிலையில், தேசிய, மாநிலக் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒருசில கட்சிகளிலிருந்து அவ்வப்போது வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இவருடைய கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து I-N-D-I-A கூட்டணியிலும் உள்ளது. இருப்பினும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் உடனான பிரச்னையால் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்காமல் அனைத்துத் தொகுதிகளுக்கும் தமது கட்சி வேட்பாளார்களையே நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆஸ்தான தொகுதிகளில் ஒன்று, ஹவுரா. இந்தத் தொகுதியில் அக்கட்சி சார்பில் மூன்று முறை வெற்றி பெற்றவர் பிரசுன் பானர்ஜி. தற்போதும் சிட்டிங் எம்பியாக இருக்கும் அவரை, மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கி உள்ளார், மம்தா. பிரசுன் பானர்ஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதை மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபன் பானர்ஜி எதிர்த்துள்ளார். அவருக்குப் பதில் வேறு நபரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாபன் பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிக்க: CAA: அதிகமாய் குடியேறிய வங்கதேசிகள்..எதிர்க்கும் 2 மாநிலங்கள்..அரசியல் ஆதாயம் தேடும் பாஜக? ஓர் அலசல்

இதுகுறித்து அவர், “ஹவுரா வேட்பாளர் தேர்வில் எனக்கு மகிழ்ச்சியில்லை. பிரசுன் சரியான தேர்வு அல்ல. ஹவுராவில் பல திறமையான வேட்பாளர்கள் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு பிரசுன் பானர்ஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் தகுதி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும். எனக்குத் தெரியும் இந்த விஷயத்தில் மம்தா என்னுடன் உடன்படமாட்டார். ஆனால், தேவைப்பட்டால், நான் ஹவுரா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுவேன். ஆனாலும் மம்தா பானர்ஜியைவிட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பாபன் பானர்ஜி
பாபன் பானர்ஜி

அவருடைய பேச்சு மம்தாவை மட்டுமல்ல, மேற்கு வங்க அரசியலையே திரும்பிப் பார்க்கவைத்தது. இதையடுத்து, அவர்மீது கோபப்பட்ட மம்தா, அடுத்த சில மணி நேரத்தில், பாபன் பானர்ஜியின் உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, ”ஒவ்வொரு தேர்தலின்போதும் பாபன் பானர்ஜி பிரச்னை செய்கிறார். பேராசைப்படுபவர்கள் மற்றும் வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு அது பிடிக்காது. அவரை நிராகரிக்க முடிவு செய்துள்ளதுடன், அவருடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளேன். எனது குடும்பமும் அவருடனான உறவை துண்டிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். அவர்கள் இருவரும் இப்படி சண்டையிடுவது இது முதல்முறை அல்ல.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிpt web

இது, மேற்கு வங்க அரசியலில் பரபரப்பானதுடன் விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில், மம்தா உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்த சில மணி நேரத்தில், பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார் அவரது சகோதரர் பாபன் பானர்ஜி.

அதில், "நான் ஒரு தவறு செய்துவிட்டேன். மம்தா என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இது தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. கட்சி வேட்பாளரை எதிர்த்து நான் எதுவும் சொல்ல முடியாது. மம்தாவின் ஆசீர்வாதமே எனக்கு எல்லாம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் தொடரும் சோகம்: தண்ணீர் ஸ்கூட்டர் விபத்தில் இந்திய மாணவர் மரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com