மல்லையா, லலித் மோடி விவகாரம்... லண்டன் செல்கிறார் உள்துறை செயலாளார்
விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகியோரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிசி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
சுமார் ஒருவாரம் திட்டமிடப்பட்டுள்ள அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் குறித்து உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டையொட்டி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயிடம், பிரதமர் மோடி பேசுகையில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் லண்டன் சென்றள்ள உள்துறை செயலாளர், இங்கிலாந்து உள்துறை அமைச்சக செயலாளர் பாட்சி வில்கின்ஸனைச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளிடம் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தாமல், நடவடிக்கைகளுக்குப் பயந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், லண்டன் நீதிமன்றத்திலும் மல்லையாவை வெளியேற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதேபோல, பணமோசடி புகாரில் சிக்கிய ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடியும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். அவரையும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.