காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிக்காத இந்தியா - மத்திய அரசை விமர்சித்த காங்கிரஸ்!
காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததற்கு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து, எக்ஸ் வலைதளத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “ நமது வெளியுறவுக் கொள்கை சீதைந்து வருவதை வெளிப்படையாகவே பார்க்கமுடிகிறது . காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு 149 நாடுகள் வாக்களித்தன. வாக்களிக்காத 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நடவடிக்கையால் நாம் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.
அக்டோபர் 8, 2023 அன்று, இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் நடத்திய கொடூரமான தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் கண்டித்தது. காசா பகுதியை முற்றுகையிட்டது, அதில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது என கண்மூடித்தனமான தாக்குதல்களை நாங்கள் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். இதனால், 60,000 பேர் இறந்துள்ளனர், இதனால், மனிதாபிமானம் நெருக்கடியில் இருக்கிறது.
போர், இனப்படுகொலைக்கு எதிரான கொள்கைகளை இந்தியா கைவிட்டுவிட்டதா?. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தம் மற்றும் அமைதியை கொண்டுவர வாதிடும் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை நாம் கைவிட்டோமா?. இந்த நிலைப்பாடு நமது நீண்டகால அணிசேரா மற்றும் தார்மீக ராஜதந்திர பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இதன் மூலம் சர்வதேச மோதல்களில் இந்தியா எப்போதும் நீதி மற்றும் அமைதியை நிலைநாட்டியுள்ளது. அக்டோபர் 19, 2023 அன்று, இந்திய தேசிய காங்கிரஸ் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது மற்றும் காசாவின் பாதிக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இப்பகுதிகளில் பயங்கரமான வன்முறை, மனிதாபிமான பேரழிவு ஆகியவை ஏற்படும்போது இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ இருக்க முடியாது. “ என்று பதிவிட்டுள்ளார்.