மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் ஆஜர் ஆகியுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த சாத்வி பிரக்யா தாக்கூர் தற்போது ஜாமீனில் உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போபால் மக்களவைத் தொகுதி பாஜக சார்பில் போட்டியிட்டு பிரக்யா வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின் போது, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பாஜக தலைவர்களே அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் பிரக்யா சிங் ஆஜர் ஆகியுள்ளார். சிறப்பு நீதிபதி வினோத் பாதல்கர் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, ‘2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி சம்பவ இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது உங்களுக்கு தெரியுமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு, தெரியாது என பிரக்யா தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மலோகனில் 2008இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இருச்சக்கர வாகனத்தில் வைத்து இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் ஏற்கனவே இரண்டு முறை உடல்நிலையை காரணம் காட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தற்போது முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.