வந்தே பாரத் ரயிலில் உணவுத் திணிப்பா.. எழுத்தாளரின் பதிவால் இணையத்தில் எதிர்வினை
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் வந்தே பாரத் ரயில்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கப்படுவதும், உணவு சேவையில் குறைபாடுகள் தொடர்பாக பேசப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவுகளில் வண்டுமற்றும் கரப்பான் பூச்சி இருந்ததாக கடந்த கால பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். நடிகர் பார்த்திபன்கூட, வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவுகள் தரமற்றதாக இருப்பதாக சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், மலையாள எழுத்தாளர் என்.எஸ். மாதவன், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சிற்றுண்டி மெனு குறித்து பதிவிட்டிருப்பது இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ஏப்ரல் 15 அன்று தனது எக்ஸ் தள பதிவில், பெங்களூரு-கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்படும் சிற்றுண்டிகளின் படத்தைப் பகிர்ந்து கொண்ட மாதவன், ”அவர்கள் மொழித் திணிப்பு பற்றிப் பேசுகிறார்கள். உணவுத் திணிப்பு பற்றி என்ன? தென்னிந்திய வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் வழக்கமான சிற்றுண்டிகள். இது பெங்களூரு-கோயம்புத்தூர் வி.பி.யிலிருந்து வந்தது” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். மக்கள் இதேபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, ”உணவு திணிப்பு ஓர் உண்மையான பிரச்னை” என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பயனர் ஒருவர், "ஆமாம், இது உண்மையில் சுவாரஸ்யமானது. மத்திய அரசு அல்லது ரயில்வே இதற்கு ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. எப்படியிருந்தாலும், இந்த கேட்டரிங் வழங்குநர்களுக்கு வட இந்திய அல்லது தென்னிந்திய உணவை எப்படிச் சமைக்க வேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள் மோசமான உணவை ருசித்ததில்லை என்றால், ரயில்வேயில் சென்று அதை அனுபவிக்கவும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "நான் வட/மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவன். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த குறிப்பிட்ட உணவு விருப்பங்களும் இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு சேவை செய்யும் ரயில்கள் அந்தப் பிராந்தியத்தின் உணவு விருப்பங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது நபர், "ஒப்புக்கொள்கிறேன். பல்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் அதையே விரும்புகிறார்கள். அவர்கள் பழக்கமானதை விரும்புகிறார்கள். சிக்கி என்பது கட்டி, சிவ்டா மாகாண உணவு. பெங்களூருவிலிருந்து கோயம்புத்தூருக்கு இரண்டுமே விருப்பமாக இருக்கக்கூடாது. காஷ்மீரில் புட்டு பரிமாறுவது போல. மதிய உணவிற்கு பனீர் மோசமானது, வேறு எதுவும் இல்லாதது போல" எனப் பதிவிட்டுள்ளார்.