
குஜராத் மாநிலத்தின் வல்சத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் பெட்டி தீப்பிடித்தது. தீ விபத்து நேரிட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஸ்ரீ கங்கா நகர் எனும் நிலையம் வரை இயக்கப்படும் ஹம்சஃபர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 22498 என்ற வண்டி எண்ணைக் கொண்ட இந்த ரயிலின் இன்ஜின் மற்றும் அதன் அருகில் உள்ள பி1 ஆகிய இரு இடங்களில் பெரிய அளவில் தீ பற்றியுள்ளது. இன்ஜினில் ஏற்கெனவே பெரிய எலெக்ட்ரிக் சாதனங்கள் இருக்கும்படியால் தீ உடனடியாக பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. வல்சத் எனும் ரயில் நிலையத்தின் அருகிலேயே இந்த ரயில் நிறுத்தபட்டது. சம்பவ இடத்திற்கு விரைவில் வந்த ரயில்வே ஊழியர்கள் மற்ற கோச்களுக்கு தீ பரவாமல் இருக்க இரு பெட்டிகளை மட்டும் தனியாக கழற்றி மற்ற பெட்டிகளை பிரித்தனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதும் உடனடியாக இறங்கியதால் பயணிகள் பாதிப்புகள் இன்றி உயிர்தப்பினர். அப்பகுதியில் தற்காலிக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இன்ஜினை அப்புறப்படுத்தி விட்டு வேறு இன்ஜினை பயன்படுத்தி ரயிலை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.