“வதந்திகளை நம்பாதீர்கள்”- அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் வேண்டுகோள்
அமைதியை கடைபிடிக்க வேண்டும்.. வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேடுதல் பணியும் தீவிரம் அடைந்தது. குறிப்பாக சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பாகிஸ்தான் ஆயுதக் கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையிலும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.
மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான குழுவினர், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்திக்க அணுகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் ஆளுநர் மாளிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மற்ற பிரச்னைகளோடு இணைத்து பார்ப்பதால் தேவையற்ற பீதி உண்டாகுகிறது. அரசியல்வாதிகள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வீரர்கள் குவிப்பால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கக்கூடும் என்பது உள்ளிட்ட ஐயங்கள் மக்களிடையே நிலவுகிறது. இதனை மையப்படுத்தியே ஆளுநர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்பது, தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைக்காகவே மட்டுமே என்பதை ஆளுநர் அறிக்கை உறுதிபட தெரிவித்துள்ளது.