மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்த இந்துமகா சபையினர் - வலுக்கும் கண்டனங்கள்

மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்த இந்துமகா சபையினர் - வலுக்கும் கண்டனங்கள்
மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக  சித்தரித்த இந்துமகா சபையினர் - வலுக்கும் கண்டனங்கள்

கொல்கத்தாவில் இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல் அமைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு நவராத்திரி பந்தல் ஒன்றை அமைத்திருந்தனர் இந்து மகா சபையினர். இந்த பந்தலில் துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தியை எருமைத் தலை கொண்ட மகிஷாசுரன் போல இந்து மகாசபை சித்தரித்திருந்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் நவராத்திரி பந்தலில் மகாத்மா காந்தியை விமர்சித்து வைக்கப்பட்டிருந்த மகிஷாசுரன் உருவம் அகற்றப்பட்டது. இருந்தபோதும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்து மகாசபையினர், மகாத்மா காந்தி மீதான எங்கள் விமர்சனங்கள் சரிதான். அதனால்தான் அப்படி செய்திருந்தோம் என்றனர்.

இதுகுறித்து இந்திய இந்து மகாசபாவின் மேற்கு வங்க மாநிலப் பிரிவின் செயல் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி கூறுகையில், "நாங்கள் காந்தியை உண்மையாகவே அசுரனாகப் பார்க்கிறோம். அவர்தான் உண்மையான அசுரர். அதனால்தான் அவரை இப்படிச் செய்தோம். மத்திய அரசு மகாத்மா காந்தியை கொண்டாடுகிறது. எனவே, நாங்கள் அத்தகைய கருத்தை அகற்றி மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காந்தியை எல்லா இடங்களிலிருந்தும் அகற்றி, அவருக்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மகிசாசூரன் இடத்தில் காந்தி சிலை வைத்தது மிகவும் கண்டனத்திற்குரியது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இது தேசத் தந்தைக்கு அவமானம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும். இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்லும்? இவர்கள் காந்திஜியைக் கொன்றவரின் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: `பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் ஆதிதிராவிடர்களில் பெண்களை விட குழந்தைகளே அதிகம்'- ஆய்வு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com