'வீட்டுக்கு சென்று சமையுங்கள் சுப்ரியா சூலே' - கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்

'வீட்டுக்கு சென்று சமையுங்கள் சுப்ரியா சூலே' - கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்
'வீட்டுக்கு சென்று சமையுங்கள் சுப்ரியா சூலே' - கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்

தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே ‘வீட்டுக்குச் சென்று சமைக்கட்டும்’ எனக் கூறிய மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்புக் கேட்டுள்ளதாக அம்மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர் தெரிவித்தார்.

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக நடத்திய போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே குறித்து பேசிய மகாராஷ்ட்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “அரசியலில் ஏன் நீங்கள் இருக்கிறீர்கள், வீட்டுக்குப் போய் சமையல் செய்யுங்கள். டெல்லி செல்லுங்கள் அல்லது கல்லறைக்குச் செல்லுங்கள், ஆனால் எங்களுக்கு ஓபிசி இடஒதுக்கீட்டைப் பெற்று தாருங்கள். லோக்சபா உறுப்பினராக இருந்தும், முதலமைச்சரிடம் எப்படி அப்பாயின்ட்மென்ட் பெறுவது என்று உங்களுக்கு தெரியவில்லை'' என கூறியிருந்தார்.



சந்திரகாந்த் பாட்டீலின் கருத்து குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய அரசியலில் பாலினப் பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்றும், இந்தப் போக்கிற்கு எதிராக அரசியல் எல்லைகளைக் கடந்து ஒன்றுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொது மேடைகளில் பெண்களை அவமானப்படுத்துவதை தடுக்கும் மசோதா கொண்டு வரவேண்டும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பாக பாஜக தலைவருக்கு மாநில மகளிர் குழு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், "சூலேவுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஆணையம் பாட்டீலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது, இந்த கருத்துக்களுக்கு அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் இடஒதுக்கீடு கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் இவ்வாறு பேசியதாக அவர் கூறினார்" என தெரிவித்தார்



பாட்டீல் மன்னிப்புக் கேட்டதற்கு பின்னர் பேசிய சுப்ரியா சூலே, "அவரது கருத்துக்கு முதல் நாள் முதலே கருத்து கூறுவதைத் தவிர்த்தேன். ஆனால் மன்னிப்புக் கேட்டதன் மூலம் அவர் தனது பெரிய மனப்பான்மையைக் காட்டியுள்ளார். இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com