மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - என்ன காரணம்?
மகாராஷ்டிராவில் குறித்த நேரத்தில் எந்தக் கட்சியினரும் ஆட்சியமைக்க முன்வராததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்து 19 நாள் ஆகியும் யாரும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர ஆளுநர் முதலில் 105 இடங்களை பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் பாஜக இதனை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அத்துடன் ஆளுநரிடம் தங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சிவசேனா கோரிக்கை வைத்தது. எனினும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இதனை நிராகரித்தார். இதனையடுத்து நேற்று இரவு இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று இரவு 8.30 மணிவரை அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
எனினும் இன்று மதியம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் சார்பில் ஆட்சியமைக்க இன்னும் கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மகாராஷ்டிராவில் எந்தக் கட்சியும் நிலையான ஆட்சியை அமைக்க முடியாத சூழல் உள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதனை ஏற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தக் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆகவே தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.