”மராட்டியத்தில் இந்தியை நுழைத்தால் போராட்டம் வெடிக்கும்” - ராஜ்தாக்கரே ஆவேசம்
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும், மும்மொழிக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர், “உங்கள் மும்மொழி சூத்திரம் எதுவாக இருந்தாலும், அதை அரசாங்க விவகாரங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அதை கல்விக்கு கொண்டு வர வேண்டாம். இந்த மாநிலத்தில் அனைத்தையும் 'இந்திமயமாக்கும்' மத்திய அரசின் தற்போதைய முயற்சிகள் வெற்றிபெற எம்என்எஸ் அனுமதிக்காது. நாங்கள் இந்துக்கள். ஆனால், இந்தி அல்ல! மகாராஷ்டிராவை இந்தி என்று சித்தரிக்க முயற்சித்தால், இங்கு ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்.
இதையெல்லாம் பார்த்தால், அரசாங்கம் வேண்டுமென்றே இந்தப் போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே ஒரு போராட்டத்தை உருவாக்கி அதைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.