மகாராஷ்டிரா | இப்படியும் நடக்குமா? மதம் மாறி திருமணம் செய்த பெண் சங்கிலியால் பூட்டப்பட்ட கொடூரம்!
மகாராஷ்டிராவில், கடந்த இரண்டு மாதங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணையும் அவரது மூன்று வயது குழந்தையையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த நடவடிக்கையை மேற்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பி.டி.சஹானே, ”மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள போகர்தான் தாலுகாவின் ஆலாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஹனாஸ் என்ற சோனல் (23). இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து 2020இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணின் தாயார், அவர்களை அவுரங்காபாத்தில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். தவிர, கடந்த ஆண்டு அவர்களை, ஆலாபூர் கிராமத்திற்குச் சென்று அனைத்து சொந்தங்களையும் சந்திக்கும்படியும், அவர்கள் உங்களை மன்னித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதை நம்பி அவர்கள், அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, அந்தப் பெண்ணின் கணவரை அவருடைய உறவினர்கள் அடித்து துரத்தியுள்ளனர். மேலும், அன்றுமுதல் அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஓர் அறையில் பூட்டிவைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையை மீட்க அவரது கணவர் பலமுறை போராடியுள்ளார். ஆனாலும் அவர் முடியவில்லை. இதையடுத்து காவல் துறையில் புகார் அளித்து பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அவர்கள் தற்போது மீட்கப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு வழக்கறிஞர் மூலம் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.