பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஒருவர்பின் ஒருவராகப் பேசிய நிலையில், சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா உடைந்ததால் ஏற்பட்டுள்ள உரசல்கள் தீபாவளி பட்டாசுபோல வெடித்தன.
சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (ஸ்ரீகாந்த் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது), அரவிந்த் சாவந்த் மற்றும் நாராயணன் ராணே ஆகியோர் இன்று தொடங்கிய மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.
பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத் ராணாவும் இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பலர் ஒரே நாளில் இந்த விவாதத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிரிந்த சிவசேனா கட்சியின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்துப் பேசிய நிலையில், பழைய சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் அரசைக் கடுமையாக சாடினார். ’உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆசைப்பட்டு பாஜக கூட்டணியைக் கைவிட்டு சரத் பவார் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்’ என ஸ்ரீகாந்த் குற்றம்சாட்டினார். பதிலுக்கு அரவிந்த் சாவந்த் தனது உரையில், ஷிண்டே பிரிவு பெயரைக் குறிப்பிடாமல் ’துரோகிகள்’ என விமர்சனம் செய்தார்.
பின்னர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணன் ரானே பேசியபோது, பலமுறை சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மக்களவை உறுப்பினர்கள் குறிப்பிட்டு விமர்சனம் செய்ததால், சிறிது நேரம் சலசலப்பு உண்டானது. நாராயணன் ரானே, முன்பு சிவசேனா கட்சியில் இருந்தவர் என்பதும் பின்பு அவர் பாஜகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே பேசியபோது, முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பெயரைக் குறிப்பிடாமல் ஒரு வருடம் முழுவதும் அலுவலகத்துக்குப் பெரும்பாலும் செல்லாமலே இருந்து சாதனை படைத்தவர் எனச் சாடினார். ஹிந்துத்துவா தத்துவத்தை விட்டுக் கொடுத்தவர் உத்தவ் தாக்கரே எனக் குறிப்பிட்டு, ’எனக்கு ஹனுமான் சாலிசா நன்றாக தெரியும்’ என மக்களவையில் பாடிக் காட்டினார் ஷிண்டே. பின்னர் பேசிய மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை உறுப்பினர் நவநீத் ராணா ’ஹனுமான் சாலிசா பாடுவேன் என சொன்னதற்கே நான் மகாராஷ்டிரா போலீசால் கைது செய்யப்பட்டேன்’ என முந்தைய உத்தவ் தாக்கரே அரசை சாடினார்.
ஆரம்பத்தில் பேசிய சுப்ரியா சுலே, ’விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்’ எனக் குறிப்பிட்டார். ’வந்தே பாரத் போன்ற வேக ரயில்கள் இயக்கப்படுவதால் பாமர மக்களுக்கு நன்மை இல்லை எனவும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் இத்தகைய ரயில்கள் நிற்பதில்லை’ எனவும் குறிப்பிட்டார். ’வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது பெருமை என்றாலும், அதே சமயத்தில் பல ஏழை மக்களுக்கான சாதாரண ரயில்கள் தற்போது இயக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது’ என அவர் குறிப்பிட்டார்.
- கணபதி சுப்ரமணியம்