மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய அமைச்சர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருந்ததாக ஒப்பந்ததாரரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்ட பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் பச்சு காடு, அம்மாவட்டத்திலுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது தரம் குறைந்த மோசமான உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதை சோதனை செய்த அமைச்சர், மருத்துவமனைக்கு உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை அறைந்தார். அமைச்சர் பச்சுகாடு உணவு ஒப்பந்ததாரரை அறையும் வீடியோவும் வெளிவந்துள்ளது.
அகோலா மருத்துவமனையில் நடந்த திடீர் ஆய்வின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக இருப்பதால் உணவு ஒப்பந்ததாரரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார் அமைச்சர். அவர் சரியான பதிலை தராததால் அவரை அறைந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
தரமான துணை உணவு மற்றும் மருத்துவமனையின் தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான பதிவுகளை பராமரிக்காதது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட துணைப்பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.