மகாராஷ்டிரா: வாக்களித்த விரலை வெட்டி மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பிவைத்த நபர்! ஏன் தெரியுமா?
மராட்டிய மாநிலம் மும்பையின் உல்ஹாஸ் நகரில் உள்ள அஷாலேபாடா பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் நானாவரே. இவர் கடந்த மாதம் தன் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மொபைல் போனில் வீடியொ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், ‘சதாரா மாவட்டம் பால்தான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக், நிதின் தேஷ்முக் ஆகியோர்தான் என் தற்கொலைக்குக் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய் பல்வேறு தரப்பினரையும் வலியுறுத்தி வருகிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய், தனது ஒரு விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர், ‘மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு பரிசாக அனுப்புகிறேன். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதால் விசாரணை மந்தமாக நடக்கிறது. எனது சகோதரர் மரணத்திற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாரந்தோறும் எனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டி அனுப்பி வைப்பேன்’ என தனஞ்சய் அதில் கூறியுள்ளார். கைவிரல் அறுக்கப்பட்ட அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனஞ்சய், “எனது சகோதரர் தற்கொலைக்கு முன்பாக ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். அவரது வங்கிக்கணக்கு மூலம் இதுபற்றி அறிந்தேன். பணத்துக்காகத்தான் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். போலீசார் இதை விசாரிக்க வேண்டும். சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர் போன்றவர்கள் தன்னை மனரீதியாக தொந்தரவு செய்வதாக சகோதரர் அடிக்கடி என்னிடம் கூறினார். இதுதொடர்பாக சில வீடியோ பதிவுகள் போலீசாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில கலால் துறை அமைச்சரான ஷம்புராஜே தேசாய், “தனஞ்சய் நானாவரே எந்த புகாரும் அளிக்கவில்லை. தவிர, அவர் என்னை அணுகவும் இல்லை. இருப்பினும், இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். மேலும் தனஞ்சய்க்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சதாராவில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உல்ஹாஸ்நகர் கமிஷனர் ஆகியோரிடம் பேசியுள்ளோம். இறந்தவருக்கும் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. அவர்கள் துன்புறுத்தப்பட்டு, உயிரை மாய்த்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்”என்றார்.