சச்சின், பிரபலங்கள் ட்வீட்... பாஜக நிர்பந்தித்ததா? - விசாரிக்கிறது மகாராஷ்டிர உளவுத்துறை!

சச்சின், பிரபலங்கள் ட்வீட்... பாஜக நிர்பந்தித்ததா? - விசாரிக்கிறது மகாராஷ்டிர உளவுத்துறை!
சச்சின், பிரபலங்கள் ட்வீட்... பாஜக நிர்பந்தித்ததா? - விசாரிக்கிறது மகாராஷ்டிர உளவுத்துறை!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரியான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். சச்சினின் இந்த ட்வீட்களுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். சச்சின் மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர்கள் சுனில் ஷெட்டி, அக்‌ஷய் குமார், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அனைவரும் ஒரே மாதிரியான கருத்தில், வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால், அனைவரும் எதோ ஒருவித அழுத்தத்தின் காரணமாக இப்படி கருத்துக்களை பகிர்ந்ததாக சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்த சந்தேகத்துக்கு தற்போது மகாராஷ்ட்ரா அரசு விளக்கம் பெற இருக்கிறது.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், "பாஜகவின் அழுத்தம் காரணமாக பிரபலங்கள் கருத்து பதிவிட்டார்களா என்பது தொடர்பாக மகாராஷ்ட்ரா உளவுத்துறை விசாரிக்கும்" என்று அறிவித்துள்ளார்.

மாநில உள்துறை அமைச்சர் இப்படி அறிவித்தாலும், அதற்கு விதை போட்டது காங்கிரஸ். மகாராஷ்டிர காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக முறையிட்டார். இதையடுத்தே அனில் தேஷ்முக் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் சாவந்த், "இந்திய பிரபலங்கள் வெளியிட்ட ட்வீட்கள் ஒற்றுமையாக இருக்கிறது. சாய்னா மற்றும் அக்‌ஷய் ஆகியோர் பதிவிட்ட ட்வீட்டில் இருந்த தகவல்கள் ஒரே மாதிரி ஆனது. இதைவிட ஒருபடி மேலாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பாஜக தலைவர் ஒருவரை டேக் செய்து ட்வீட் பதிவிட்டு இருந்தார். இது ஆளும் கட்சிக்கும், பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதை சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறது. எனவேதான் பாஜக தரப்பில் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்ததா என விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com