”பார்க்கிங்கிற்கு இடமில்லை என்றால்..” கார் வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மகாராஷ்டிரா அரசின் அறிவிப்பு
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மறுபுறம், வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் இந்த மாவட்டமும் உள்ளது. இதனால், அங்கு வாகனப் பயன்பாடுகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு எப்போதும் வாகன நெருக்கடி அதிகம் காணப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மும்பை பெருநகர பகுதியில் வாகனங்கள் நிறுத்தவே இடம் இல்லாத சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை பெருநகரப் பகுதியில் (MMR) அதிகரித்து வரும் பார்க்கிங் நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த வாகன நிறுத்த கொள்கையை செயல்படுத்த மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முக்கிய கட்டமாக நகராட்சி கமிஷனர்களுடன், போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், வாகன நிறுத்த இடத்துக்கான சான்றிதழ் இல்லாவிட்டால் புதிய கார்கள் பதிவு செய்யப்படாது என்று அமைச்சர் பிரதாய் சர்நாயக் கூறினார். மாநிலத்தின் புதிய பார்க்கிங் கொள்கை குறித்த உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், ”வாகன நிறுத்துமிடங்களை நிர்மாணிக்க திட்டமிட்டு உள்ளோம். ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள், வாகன நிறுத்தத்துடன் கூடிய பிளாட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். வாங்குபவர்களும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையிடம் இருந்து வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கீட்டுக்கான சான்றிதழை பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படாது” எனத் தெரிவித்தார்.