உச்சகட்ட ‘அரசியல் ஆடுகள’த்தில் சிவசேனா - ஆளுநருடன் 5 மணிக்கு சந்திப்பு
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா கட்சி உச்சகட்ட பதற்றமான நிலையில் இருக்கின்றது. இன்னும் சில மணி நேரங்களில் நடக்கப்போகும் நிகழ்வுகள்தான் சிவசேனா அரியணையில் ஏறப்போகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க போகிறது. தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தெரிவித்த நிலையில், சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் கேட்டுக் கொண்டபடி, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆக, ஆட்சி அமைப்பதில் சிவசேனா உறுதியுடன் இருக்கிறது. இன்று மாலை 7.30 மணி வரைதான் சிவசேனாவுக்கு நேரம் உள்ளது. அதற்குள் எல்லாம் சிவசேனாவுக்கு சாதகமாக முடிய வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது இருகட்சிகளுக்கு இடையிலான பொது செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்பு முடிந்த பிறகும் சரத்பவார் எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை செய்தே தங்களது முடிவை அறிவிக்கவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் மாநில தலைவர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகுதான் காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும். அதனால், தனக்கு உள்ள கெடுவின் கடைசி நிமிடம் வரை சிவசேனாவுக்கு பதற்றம்தான்.
காங்கிரஸ் தலைவர்களிடம் ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், 5 மணிக்கு ஆளுநரை சந்திக்க சிவசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு சாதகமான சூழலே நிலவி வருகிறது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய இரண்டும் சிவசேனாவை ஆதரிக்கும் முடிவை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒரேவேளை அவர்கள் மாற்று முடிவினை எடுத்துவிட்டால், சிவசேனாவில் முதல்வர் கனவு அவ்வளவுதான்.