பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்: முன்னாள் முதல்வர்
உயர் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்று மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல், மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்விராஜ் சவான், உயர் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
புழக்கத்தில் இருந்த பணத்தில் பெரும்பகுதி கருப்புப் பணம் என்று அரசு தவறாகக் கணித்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். ரியல் எஸ்டேட், நகைகள், நிலங்கள் போன்றவற்றில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கும் என்பதை அரசு புறக்கணித்துவிட்டதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பை சரியான முறையில் அமல்படுத்தாததால் அது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துவிட்டதாகவும் சவான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

