மகாராஷ்டிரா 'நாற்காலி விளையாட்டு' ! கடந்து வந்த பாதை
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் முதல் இதுவரையிலான நிகழ்வுகளை பார்க்கலாம்.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றிகண்டன. பாஜக, சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்சி அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்தது. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, ஆட்சியில் சரிபங்கு என சிவசேனா பிடிவாதத்துடன் இருந்ததால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் முதலமைச்சர் பதவியில் தொடர்வேன் என ஃபட்னாவிஸ் கூறியது, சிவசேனாவை மேலும் எரிச்சலடையச் செய்தது.
ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்த நிலையில், நவ. 4ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் தேவேந்திர ஃபட்னாவிஸ். அதேநாளில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத் பவார் ஆலோசனையில் ஈடுபட்டார். அமித் ஷாவை சந்தித்துவிட்டு மும்பை திரும்பிய ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், அதிக இடங்களில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். கட்சியின் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பாஜக, போதிய எண்ணிக்கை இல்லை என்பதால் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநரிடம் கூறியது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைப் பெறும் முனைப்பில், பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்தது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் விலகினார்.ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரை, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். இதனிடையே ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியினர், ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரினார். ஆனால் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. 3ஆவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் போதிய அவகாசம் வழங்கவில்லை என சிவசேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கான சூழல் இல்லை எனக்கூறி, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்தார். அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.