பாஜக கூட்டணியில் ‘சோட்டா’ ராஜன் தம்பிக்கு எம்.எல்.ஏ சீட்டு
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சோட்டா ராஜன்’ தம்பிக்கு பாஜக - சிவசேனா கூட்டணியில் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த 6 தொகுதிகளில் ஒரு தொகுதியை ‘சோட்டா ராஜன்’ தம்பி தீபக் நிகல்ஜி என்பவருக்கு இந்திய குடியரசுக் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, பல்தான் தொகுதியில் தீபக் நிகல்ஜி போட்டியிடவுள்ளார். இவர் இதற்கு முன்னர் மும்பையின் சேம்பர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் இந்த முறை இவர் நிற்கும் தொகுதியில் செல்வாக்கு கொண்டவராக திகழ்கிறார் எனக் கூறப்படுகிறது. ‘சோட்டா ராஜன்’ மும்பையில் பிரபல தாதாவாக வலம் வந்தவர்.