இந்தியா
பிறந்த சிசுவை 1.5 கி.மீ பைக்கில் கொண்டு சென்று காப்பாற்றிய மருத்துவர்
பிறந்த சிசுவை 1.5 கி.மீ பைக்கில் கொண்டு சென்று காப்பாற்றிய மருத்துவர்
ஊரடங்கிற்கு நடுவில் பிறந்த சிசுவைத் தனது இருசக்கர வாகனத்தில் 1.5 கிலோமீட்டர் எடுத்துச் சென்று மகாராஷ்டிரா மருத்துவர் ஒருவர் காப்பாற்றி இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் அலிபாபா பகுதியில் குடியிருப்பவர் ஸ்வேதா பாட்டில். இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் அவரது கணவர் கேத்தன் அருகிலுள்ள ஒரு நர்சிங் ஹோம்-க்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்குப் போதிய வசதி இல்லை. குழந்தையும் பிறந்துவிட்டது.
ஆகவே அந்த நர்சிங் ஹோமில் இருந்த மருத்துவர் சந்தோர்கர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஏறக்குறைய 1.5 கிலோமீட்டர் தூரம் பிறந்த சிசு இருசக்கர வாகனத்திலேயே பயணித்துள்ளது. சரியான நேரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டதால் சிசுவின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தத் தம்பதி ஒரு குழந்தையை இழந்துள்ளனர். ஆகவே அவர்களுக்கு அதிக பதற்றம் இருந்துள்ளது.
இது குறித்து ஸ்வேதா கணவர் கேத்தன், “ஸ்வேதா ஒரு நீரிழிவு நோயாளி. அவளது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் உடனடியாக மருந்து போட்டாள்” என்று கூறுகிறார்.
இதுகுறித்து மருத்துவர் சந்தோர்கர், “ஒரு ஆண் குழந்தை 3.1 கிலோ சராசரி எடையுடன் பிரசவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு இருந்ததால் வாகனங்கள் ஓடவில்லை. ஆகவே புதிதாகப் பிறந்த குழந்தை 1.5 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. நான் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தேன். அங்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. 12 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தையின் நிலைமைக்கு ஆபத்து இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது” என்றார்.
மேலும் அவர், “"இது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவம். பரிசோதனையின் போது குழந்தை என் விரலைப் பிடித்துக் கொண்டது. அப்போது பாதுகாப்பாக இருக்கிறாய். விரைவில் குணமடைந்துவிடுவாய் என்று குழந்தையிடம் உறுதியளிக்க விரும்பினேன்” என்று கூறியுள்ளார். உணர்வுப்பூர்வமான இந்தப் பாசப் போராட்டம் மாநிலம் தாண்டி மனங்களைத் தட்டி எழுப்பியுள்ளது.