"என்னை கைது செய்யுங்கள்" - அமலாக்கத்துறை சம்மனுக்கு சஞ்சய் ராவத் அதிரடி பதில்!

"என்னை கைது செய்யுங்கள்" - அமலாக்கத்துறை சம்மனுக்கு சஞ்சய் ராவத் அதிரடி பதில்!
"என்னை கைது செய்யுங்கள்" - அமலாக்கத்துறை சம்மனுக்கு சஞ்சய் ராவத் அதிரடி பதில்!

ஆட்சிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள் பதவியையும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பறித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பம் அம்மாநிலத்தில் ஆட்சியை நிலைக்குமா என்ற கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி எழுப்ப அவருக்கு ஆதரவாக 35க்கும் அதிகமான சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் 8க்கும் மேற்பட்ட சுயச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு வழங்கினர். சூரத்தில் முகாமிட்டிருந்த இவர்கள் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளனர். இதில் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப் ராவ் பட்டில், விவசாயத்துறை அமைச்சர் சந்திரன் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் அடக்கம்.

சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும் இந்த அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து அதிரடியாக அமைச்சர் பதவியையும் முதல்வர் உத்தவ் தாக்கரே பறித்துள்ளார். போட்டியில் குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே கவனித்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஆகியவை கூடுதல் பொறுப்பாக சுபாஷ் தேசாய்க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகிய துறைகளை கவனித்து வந்த உதய் சாவந்த் அவர்களின் பொறுப்பு உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்ய தாக்குவதற்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடைய அமைச்சர் பொறுப்புகளும் சஞ்சய் பன்சோடி, சதீஜ் பாடீல், விஸ்வஜீத் காடம் உள்ளிட்டோருக்கு பகர்ந்து வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அதிர்ச்சியில் இருந்தாலும் மக்கள் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பதவிகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 1,034 கோடி ரூபாய் பத்ரா சால் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்தது.

இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்பியிருப்பது இப்போதுதான் தெரிய வந்தது. நல்லது ! மகாராஷ்டிராவில் பெரிய அரசியல் முன்னேற்றங்கள் உள்ளன. பாலாசாகேபின் சிவசைனிகர்களான நாங்கள் ஒரு பெரிய போரை நடத்துகிறோம். இது என்னை தடுக்கும் சதி. நீங்கள் என் தலையை துண்டித்தாலும், நான் கவுகாத்தி வழியில் செல்ல மாட்டேன். என்னை கைது செய்து கொள்ளுங்கள்” என்று காட்டமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சஞ்சய் ராவத்.

மகாராஷ்டிராவில் உச்சபட்சம் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பு எம்.எல். ஏக்களை மீண்டும் சிவசேனாவிற்கே அழைத்துவரும் பணியில் சஞ்சய் ராவத் ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com