ஒளரங்கசீப் விவகாரம் | ”சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது” - முதல்வர் பட்னாவீஸ் சொன்ன கருத்து
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிரான போராட்டங்களைக் கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பண்டிகைகளின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என காவல் துறை தெரிவித்துள்ளது. என்றாலும், அம்மாநிலத்தில் ஒளரங்கசீப் பற்றிய கருத்துகள் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் யாராவது ஒருவர் அதைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மீண்டும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “நாம் ஒளரங்கசீப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்தான். ஆனால் அவரை யாரும் பெருமைப்படுத்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும், அங்கு சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் இடித்து அகற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதுபோல், “தேவையான இடங்களில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும், அதற்காக யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ”மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” என்று மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக ஒளரங்கசீப் விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுரேஷ் 'பையாஜி' ஜோஷி, “ஔரங்கசீப்பின் கல்லறை பற்றிய விவகாரம் தேவையில்லாமல் எழுப்பப்பட்டுள்ளது. அவர் இந்தியாவில் இறந்தார், எனவே அவரது கல்லறை இங்கே கட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் அங்கு செல்வார்கள். இந்த சர்ச்சை தேவையற்றது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.