7 நாளில் 3.2 லட்சம் எலிகளை எப்படி ஒழித்தீர்கள்..?: பாஜக எம்எல்ஏ சரமாரி கேள்வி
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சுற்றித்திரிந்த 3 லட்சத்து 20 ஆயிரம் எலிகளை வெறும் ஏழே நாட்களில் ஒழித்ததாக வெளியான தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சுற்றித் திரிந்த எலிகளை அழிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், 7 நாட்களில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட எலிகளை கொன்றிருப்பதாக அரசு கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை என்றும் இதில் ஏதோ முறைகேடு நடந்திருக்கலாம் என சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் ஏக்நாத் காட்சே கேள்வி எழுப்பினார். மும்பை மாநகராட்சியில் 6 லட்சம் எலிகளை கொல்ல 2 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கொல்லப்பட்ட எலிகள் எப்படி வெளியே எடுத்து செல்லப்பட்டன .எங்கே கொட்டி அழிக்கப்பட்டன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் விடுவதற்கு பதில் 10 பூனைகளை வைத்திருந்தாலே எளிதில் வேலை முடிந்திருக்குமே என்றும் உறுப்பினர் புன்சிரிப்புடன் கூறினார்.