மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்
மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் யார்? அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்? என்பது குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது. இந்த மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 2009 ஆம் ஆண்டு தேர்தல் முதல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். ஃபட்னாவிஸ்க்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிவசேனா கட்சியின் தாக்கரே குடும்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் வாரிசு ஆதித்ய தாக்கரே. சிவசேனாவின் கோட்டையாக திகழும் வொர்லியில் அவர் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதலமைச்சரான அசோக் சவான் தனது தந்தையும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான சங்கரராவ் சவானின் போக்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் போக்கர் தொகுதியில் முதல் முறையாக அசோக் சவான் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதலமைச்சரான பிருத்விராஜ் சவான், கரட் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். சதாரா மக்களவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் இவரை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் உதயன்ராஜே போஸ்லே, பாஜகவுக்கு தாவிய நிலையில், கரட் தெற்கு தொகுதியில் பிருத்விராஜ் சவான் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தொகுதியான பாராமதியில் அவரது மருமகனும் அக்கட்சியின் முக்கிய தலைவருமான அஜித் பவார் போட்டியிடுகிறார். இவர் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.